சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 -ம் ஆண்டு செப்டம்பர் 22 -ம் தேதி சென்னை அப்போலோவில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு, டிசம்பர் 5 -ம் தேதி ஜெயலலிதா மரணமடைந்ததாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, 6 -ம் தேதி அன்று ஜெயலலிதா, மெரினா கடற்கரை அருகே அடக்கம் செய்யப்பட்டார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக பல்வேறு அரசியல் தலைவர்கள் சந்தேகம் தெரிவித்தனர். இதனையடுத்து, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது.
இந்த ஆணையம் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது. ஆனால், மருத்துவ நிபுணர்கள் இல்லாத ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க முடியாது என்றும், ஆறுமுகசாமி ஆணையம் செயல்பட தடைவிதிக்க வேண்டும் என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தடை பெற்றது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், ஆணையம் செயல்படாத நிலை உள்ளது.
ஆணையத்தின் பதவிக்காலம் டிசம்பர் 24-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் , தற்போது மேலும் 6 மாசம் நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.