சென்னை: தமிழகத்துக்கு மேலும் 1.69 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள் விமானம் மூலம் வந்தடைந்துள்ளது.  இதை தேவைப்படும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும், 166 மையங்களிலும் ஒவ்வொரு மையத்திலும் தினசரி 100 பேர் வீதம் மொத்தம் 16,600 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக முதல்கட்டமாக கு 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்துகளும்,  20 ஆயிரம் ‘கோவாக்சின்’ தடுப்பு மருந்துகளும் வந்தடைந்தன. பின்னர்  2-வது கட்டமாக 5 லட்சத்து 8 ஆயிரத்து 500 ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்துகளும் வந்தடைந்தது.

தற்போது  கூடுதலாக 1 லட்சத்து 69 ஆயிரத்து 920 ‘கோவாக்சின்  தடுப்பூசிகள்  விமானம் மூலம் சென்னைக்கு வந்தது. அந்த தடுப்பூசிகள் அனைத்தும் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மாநில நடமாடும் மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.