வாஷிங்டன்: அமெரிக்கர்கள் அடுத்த நூறு நாட்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிட்டுள்ள புதிய அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவுக்கு வருபவர்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டியதும் கட்டாயம் என்று தெரிவித்துள்ளார்.
அதிபர் பைடன், தமது பதவியேற்பு விழாவில் பேசும்போது, இரண்டாம் உலகப் போரை விட அதிகமான மனித உயிர்கள் கொரோனாவால் பறிபோனதாக தெரிவித்திருந்தார். அதையடுத்து, தற்போது, அமெரிக்கர்கள் அனைவரும் அடுத்த 100 நாட்களுக்குத் தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், ஏப்ரல் மாதம் வரை முகக் கவசம் அணிவதனால் சுமார் 50 ஆயிரம் உயிர்களை காக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
மேலும், “முகமூடிகளை அணிவதோடு மட்டுமல்லாமல், வேறொரு நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு பறக்கும் ஒவ்வொருவரும் அந்த விமானத்தில் ஏறுவதற்கு முன்பு, அவர்கள் புறப்படுவதற்கு முன்பு, அவர்கள் அமெரிக்காவுக்கு வரும்போது தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும், கண்டிப்பாக கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பதவி ஏற்ற முதல் 100 நாட்களுக்குள், கொரோனா ஆக்கிரமிப்பில் இருந்து விடுபடவும், பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி பிரச்சாரத்தை மேற்கொள்வதன் மூலம் இந்த திட்டம் தொடங்குகிறது என்றும் பிடன் கூறினார்.