பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் துமாகுருவில், கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டதுபோல் பாவலா காட்டும் அரசு அதிகாரிகள் குறித்து, தற்போது இணையதளங்களில் பரவிவரும் வீடியோக்கள் உண்மைக்கு மாறானவை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
துமாகுரு அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வரும், நிர்வாகியும் இப்படி நாடகமாடியதாக குற்றச்சாட்டு பெரியளவில் பரவி விமர்சனத்திற்கு உள்ளாகியது. தற்போது அதற்கு அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “துமாகுருவில் அரசு மருத்துவக் கல்லூரி கிடையாது. எனவே, குறிப்பிடப்பட்ட அந்த கல்லூரி முதல்வரானவர், அங்குள்ள அரசு நர்சிங் கல்லூரியின் முதல்வர். அவரின் பெயர் டாக்டர்.ரஜனி.
அந்த அரசு ஊழியர்கள் இருவரும் ஏற்கனவே கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டுவிட்டார்கள். ஆனால், பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் வேண்டி கேட்டுக்கொண்டதற்கிணங்கவே, புகைப்படத்திற்கு அப்படியான போஸ் கொடுத்தனர்” என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விளக்கம் நம்பத்தக்கதாக இல்லை என்ற குரல்களும் கேட்கின்றன.