மும்பை: மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல்முறையாக 50 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் ஆனது. இன்று காலை 9 மணிக்கு பங்குச்சந்தை வர்த்தகத்தை தொடங்கியவுடன் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 50,096.57 புள்ளிகளில் வர்த்தகமானது. இது வர்த்தகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபராக ஜோபைன் பதவி ஏற்றதும், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக உலக பங்குச்சந்தை நிலவரம் மாறி வருகிறது. இந்த நிலையில், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் வரலாறு காணாத உயர்வைக் கண்டுள்ளது.
நிஃப்டியும் நூறு புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 14 ஆயிரத்து 700 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகமானது. இந்த நிலையில், இன்று காலை முதலே மும்பை பங்குச்சந்தை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.
இந்தியாவில், கடந்த ஒரு மாதமாகவே, இந்திய பங்குச்சந்தைகள் சிறப்பான உயர்வை கண்டுவருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதன் காரணமாக, அடுத்து வரும் நாட்களிலும் பங்குச்சந்தை உயர்வை சந்திக்கும் என வர்த்தக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.