சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்றும், நாளை மறுநாள் (22ந்தேதி) தடுப்பூசி போட இருக்கிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலும் கடந்த 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 500க்கும் மேற்பட்டோருக்கு சிறு சிறு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதன் காரணமாக, தடுப்பூசி போடுவதற்கு பெரும்பாலானோர் தயாராக இல்லாத சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், தடுப்பூசியால் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றும், இந்தியாவில் தயாரிக்கப்பட்டுடளள கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகளும் பாதுகாப்பானவை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக்கின் உறுப்பினரான டாக்டர் வி,கே.பால், உலகமே தடுப்பு மருந்துக்காக காத்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார். மருத்துவர்களும் செவிலியர்களும் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும், ஏதும் பின்விளைவுகள் ஏற்பட்டால் அதற்கான மருத்துவச் செலவுகள் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் டாக்டர். வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
அதுபோல தமிழகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்வர்களுக்கு இதுவரை எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்றும், தமிழகத்திற்கு மேலும் 5 லட்சத்து 8 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் நாளை வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தடுப்பூசி போட்டுக்கொள்வதால் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று கூறியதுடன், மக்களின் சந்தேகத்தை போக்க நானே தடுப்பூசி போட்டுக்கொள்ள இருக்கிறேன், நாளை மறுதினம் தடுப்பூசி போட்டுக்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.