டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அவர்களது மரணம் இயற்கை மரணம் என மாநில மற்றும் மத்திய அரசுகள் கூறி வருகின்றன.
ஏற்கனவே உ.பி. மாநிலம் மொராதாபாத் பகுதியை சேர்ந்த மருத்துவமனை ஊழியர் உயிரிழந்த நிலையில், தற்போது கர்நாடக மாநிலத்தில் சுகாதாரத்துறை பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 500க்கும் மேற்பட்டோருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்து இருப்பது, அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 16ந்தேதி உ.பி. மாநிலத்தில், மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த மஹிபால் சிங் என்ற 46 வயதான அரசு மருத்துவமனை ஊழியர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில், அடுத்த நாளே திடீரென (ஞாயிற்றுக்கிழமை) மரணமடைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மூச்சுப்பிடிப்பு மற்றும் மார்பு வலி காரணமாக மறுநாள் உயிரிழந்த நிலையில், தடுப்பு மருந்து எடுத்த பிறகு, அவரது உடல்நிலை மோசமடைந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தடுப்பூசிக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மொராதாபாத் தலைமை மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ) எம்.சி. கார்க் கூறினார்.
அவரது உடற்கூறாய்வு சோதனையில், இருதய நோய் காரணமாக ஏற்பட்ட செப்டிசெமிக் அதிர்ச்சி’ (septicemic shock) இறப்புக்கான உடனடி காரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் ககூறப்பட்டு உள்ளது. இறந்தவரின் நுரையீரல், இதயம் மற்றும் இரத்த மாதிரிகள் இரண்டும் ஹிஸ்டோபோதாலஜி பரிசோதனைக்கு பாதுகாக்கப்பட்டுள்ளன’ என்றும் பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சர்ச்சைகள் தொடர்கின்றன.
உயிரிழந்த நபர் ஏற்கனவே நிமோனியா பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், சாதாரண இருமலும் இருந்தது. ஆனால், தடுப்பு மருந்தின் முதல் டோஸ் எடுத்துக் கொண்ட பிறகு, அவரது நிலை மோசமடைந்தது என்று அவரது மகன் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. மாரடைப்பு காரணமாக இறந்ததால், இதை தடுப்பூசியின் நேரடி எதிர்வினை என்று எடுத்துக்கொள்ள முடியாது என்று உத்தர பிரதேச மாநில அரசும் தெரிவித்துள்து.
இந்த நிலையில், தற்போது கர்நாடக மாநிலத்தில், தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார ஊழியர் ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது மரணமும் மாரடைப்பு என்று கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்ட சுகாதாரத் துறையில் பணியாற்றி வந்த நாகராஜ் 43 வயது ஊழியர், நேற்று ( திங்கள்கிழமை) உயிரிழந்தார். இவர் ஜனவரி 16 ம் தேதி மதியம் 1 மணியளவில் தடுப்பூசி போடப்பட்டதாக கர்நாடக சுகாதாரத் துறை தெளிவுபடுத்தியுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கூறிய ஜெய்தேவ் இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் சி.என்.மஞ்சுநாத் கூறுகையில், “சுகாதார பணியாளரின் மரணம் தற்செயலானது, அதற்கு தடுப்பூசி போடுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார். டாக்டர் மஞ்சுநாத் அரசு கோவிட் 19 (COVID -19) இல் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தை தழுவி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.