சென்னை:  தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்காக நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னையில் உள்ள 70 மாநகராட்சி பள்ளிகளும்நாளை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனாஅச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் சுமார்  10 மாதங்களுக்கு பிறகு நாளை திறக்கப்பட உள்ளது.  முதல்கட்டமாக  10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் சமூக இடைவெளியுடனும், கெரோனா நெறிமுறைகளை கடைபிடித்தும் நாளை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிக்கு வரும் மாணாக்கர்கள், பெற்றோரின் எழுத்துப்பூர்வமான அனுமதி கடிதத்துடன் ம வர வேண்டும் என்றும், பள்ளிக்கூடத்தில் மாணவர்களை இடைவெளிவிட்டு அமர வைக்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என பல்வேறு வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் 38 உயர்நிலை பள்ளிகள், 32 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 70 பள்ளிகள் நாளை (ஜன.19) திறக்கப்படும் என மாநகராட்சி உதவி கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறிய,  உதவி கல்வி அலுவலர் முனியன், ” நாளை சென்னை மாநகராட்சி கீழ் இயங்கும் 70 பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. அரசு அறிவித்த அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி, மாணவர்கள் உள்ளே வருவது முதல் வெளியில் செல்வதுவரை அவர்களுக்கு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வகுப்பறையில் 25 நபர்களுக்கு குறைவான மாணவர்களை மட்டுமே தகுந்த இடைவெளியுடன் அமர வைப்போம். பள்ளிகள் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க 10 அலுவலர்கள் இருக்கிறோம். தினமும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் சென்று ஆய்வு மேற்கொள்வோம் ஏதாவது குறைகள் இருந்தால் அவை சரி செய்யப்படும்” என கூறினார்.