டில்லி

கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.  இன்று முதல் நாளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 14 பேருக்கு எதிர் விளைவுகள் ஏற்பட்டுள்ளன.  அவர்கள் அபாய நிலையில் இல்லை என்றாலும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்,

தற்போது மத்திய அரசு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு மருந்துகளுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.  இதில் சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்யும் கோவிஷீல்ட் தடுப்பூசி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலை மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவன இணைத் தயாரிப்பாகும்.  இந்த தடுப்பூசி இதுவரை மூன்று கட்ட பரிசோதனைகளை முடித்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் உற்பத்தி செய்யும் கோவாக்சின் தடுப்பு மருந்து இந்நிறுவனத்தின் சொந்த தயாரிப்பாகும்.  இந்த தடுப்பு மருந்து தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையி9ல் உள்ளதால் இந்த மருந்தின் திறன் பற்றி இன்னும் முடிவு ஏதும் தெரியப்படாத நிலையில் உள்ளது.  ஆயினும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.  அதன்படி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொள்வோர் இந்த தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளதை தாங்கள் அறிந்துள்ளதாகவும் மருந்து இன்னும் பரிசோதனையில் உள்ள போதே தாங்கள் போட்டுக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளதாகவும் ஒப்புதல் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.