சென்னை: ஐஐடியில் சமஸ்கிருத மொழியைப் புகுத்தி நடவடிக்கை எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் அழகிரி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி உள்ளதாவது: இந்தியாவில் சமஸ்கிருத மொழியைப் பரப்புவதற்காகக் கடந்த மூன்றாண்டுகளில் ரூ.643.83 கோடியை பாஜக அரசு செலவழித்திருக்கிறது.
செம்மொழி தகுதி பெற்றுள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய ஐந்து மொழிகளுக்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.29 கோடி மட்டும்தான்.
இந்தி, சமஸ்கிருதத் திணிப்பையும், இதற்காக மத்திய அரசு நிதியை வாரி வழங்குவதையும், தமிழ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட மொழிகளைப் புறக்கணிப்பதையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இத்தகைய போக்கு தொடருமேயானால் மத்திய பாஜக அரசு கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என எச்சரிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.