சென்னை: என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்…கோயில் கோயிலாக அலைகிறேன்… என அதிமுக தலைமைமீது ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் கடுமையான விமர்சனங்களை எழுப்பி தனது உள்ளக்குமுறலை கொட்டியுள்ளார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது, சிறையில் இருந்து விரைவில் விடுதலையாக உள்ள சசிகலாவுக்கு ஆதரிவு தெரிவிக்கும் வகையிலாகவும், இபிஎஸ், ஓபிஎஸ் தலைமைக்கு ஆப்பு வைக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாகவே சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
சசிகலா இன்னும் 10 நாட்களில் சிறையில் விடுதலையாக உள்ளார். அவரது வருகை தமிழகஅரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் கடுமையான அதிர்வலைகளை உருவாக்கும் என நம்பப்படுகிறது.
அவரது விடுதலையை, ஏற்கனவே மறைந்த ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில், தண்டனை பெற்று பின்னர், பெயில் காரணமாக பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வந்தபோது, கொடுக்கப்பட்ட வரவேற்பைப் போல, சசிகலாவுக்கும் கொடுக்க அவரது சொந்த பந்தங்கள், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் போன்றவை தீவிரமாக களமறிங்கி உள்ளன.
ஓசூர் முதல் சென்னை வரை அவரை வரவேற்க தயாராகி வருகின்றனர். இதற்காக கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழிக்கப்பட்டு வருகிறது. சாலை முழுவதும் வண்ண வண்ண பேனர்கள், பிளக்ஸ்கள் வைக்க அனுமதி வாங்கப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான வாடகை வாகனங்களும் புக் செய்யப்பட்டு உள்ளது. சசிகலாவை பிரமாண்டப்படுத்த அவரது துதிபாடிகள் பணியாற்றி வருகின்றனர்.
சசிகலா வருகை ஏற்கனவே அதிமுகவிலும் சலசலப்பை உருவாக்கி உள்ளது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா போன்றவர்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறி தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜேந்திர பாலாஜி கூறும்போது, அ.தி.மு.க.- அ.ம.மு.க.வுக்கு இடையில் நடப்பது தாய் இல்லாத நேரத்தில் நடக்கும் அண்ணன்-தம்பி பங்காளி சண்டைதான். சசிகலா ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் அ.தி.மு.க.வை பலப்படுத்தும் முடிவைத்தான் எடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவை அம்மா என்றும் சசிகலாவை சின்னம்மா என்றும் அழைப்பார்கள். இப்போது ஜெயலலிதா இல்லாத நிலையில் சசிகலாவை தாய் ஸ்தானத்துக்கு உயர்த்தி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ள கருத்து கட்சிக்குள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், இதற்கு காட்டமாக பதில்அளித்த டி.ஜெயக்குமார், இரட்டை இலை சின்னத்தை முடக்க முயன்ற அ.ம.மு.க.வுடன் அண்ணன்- தம்பியாக இருக்க முடியாது. அ.மமு.க.வுடன் நமக்கு எந்த உறவும் இல்லை என்றார். ஆனால், அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிமுக தலைமை முன்வரவில்லை. இதுவும் தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற துக்ளக் இதழ் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி தி.மு.க.வை எதிர்க்க வேண்டும் என்றால் சசிகலா போன்றோரையும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கொளுத்திப்போட்டார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் குருமூர்த்தி பேசியது, இது பாஜகவின் நோக்கம் என்பதையே காட்டுவதாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக அமைதியாக இருந்து வந்த, ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன், தற்போது வெகுடெண்ழுந்து, தனது மனக்குமுறலை கொட்டியுள்ளர். அதிமுக தலைமைமீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை வைத்துள்ள பூங்குன்றன் சங்கரலிங்கம், தன்னை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று கூறியிருப்பது மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக பூங்குன்றன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,
என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு என் விசுவாசம் பற்றித் தெரிய வாய்ப்பில்லை. இந்த ஆட்சி அம்மாவின் ஆட்சி. இதில் உரிமை கொண்டாடுவதில் யாருக்கும் பெருமையுமில்லை. அம்மா அவர்கள் கஷ்டப்பட்டு பெற்று தந்த ஆட்சிக்கு என்னால் ஒரு களங்கம் வரக்கூடாது என்பதால் மௌனம் காத்தேன். தை பிறந்து விட்டது. தேர்தலும் நெருங்கிவிட்டது. சிலரின் பேச்சும், விமர்சனங்களும் என் மனதை பெரிதும் பாதித்து வந்தன. அதற்காகவே இந்த மனக்குமுறல்.
ஏற்கனவே அ.தி.மு.க. தலைமையை, பாஜக மிரட்டி பணிய வைத்து, இயக்கி வருகிறது என திமுக உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதன் பயனாகத்தான், மோடி அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எடப்பாடி அரசு ஆதரவு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக பாஜக இடைணுய சலசலப்பு நீடித்து வருகிறது. இதனால், அதிமுகவை மீண்டும் பிளவுபடுத்தி, இரட்டை இலையை முடக்க பாஜக முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு, சசிகலாவை உபயோப்படுத்த திட்டமிட்டு வருகிறதோ என்ற எண்ணங்களும் அரசியல் பார்வையாளர்களிடம் எழுந்துள்ளது.
இதுபோன்ற சூழலில், மறைந்த ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் முகநூல் பதிவு, அதிமுக மேல்மட்டத்தில் மேலும் பற்றியெரியத் தொடங்கி உள்ளது.