பெங்களூரு: பாஜக உறுப்பினர், ஆர்எஸ்எஸ் மூத்த நிர்வாகி என பல்வேறு பொய்களை கூடிறஇ பெங்களூருவில் கோடிக்கணக்கில் மோசடி செய்துவந்த ஜோதிடர் ஒருவர், ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரிடமும் ரூ.8.8 கோடி மோசடி செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்.எஸ்.எஸ்.நிர்வாகி, பாஜக தலைவர் என கூறி ஏராளமானோரை ஏமாற்றி மோசடி செய்தவர் யுவராஜ் சுவாமி (வயது 52). இவர் பெங்களூரு நாகர்பாவியைச் சேர்ந்தவர். ஜோதிடம், ரியல் எஸ்டேட், திரைப்பட தயாரிப்பு என தொழில்களை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர், மத்தியஅரசு வேலை பெற்றுத்தருவதாக கூறி, பெங்களூரு, விஜயநகரைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.1.8 கோடி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. அவர் கொடுத்த புகாரில் கடந்த ஆண்டு (2020) டிசம்பரில் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து யுவராஜ் சுவாமி மீது புகார்கள் குவிந்தன. பெங்களூரு மல்லேஸ்வரத்தைச் சேர்ந்த 62 வயதான பெண் ஒருவர் யுவராஜ் தன்னிடம் ரூ.8.3 கோடி மோசடி செய்ததாக புகார் கூறியுள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் யுவராஜ் சுவாமி வழக்கு பதிவு செய்து, அவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, யுவராஜ் வீட்டில் இருந்து ரூ.2.1 கோடி ரொக்கப்பணம், ரூ.1.7 கோடி மதிப்பிலான 3 சொகுசுகார்கள், ரூ.91 கோடி மதிப்பிலான 100 காசோலைகள், 26 இடங்களில் வாங்கப்பட்ட பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
இதனிடையே பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தன் மகளுக்கு கர்நாடக அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக யுவராஜ் சுவாமி மீது புகார் அளித்துள்ளார்.
மேலும் ஓய்வுபெற்ற பொறியாளர் ஒருவர் தன் மகனுக்கு பெங்களூரு மாநகராட்சியில் உதவி நிர்வாக பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார்.
இதனிடையே யுவராஜ் சுவாமி கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவியும் நடிகையுமான குட்டி ராதிகாவுக்கு கடந்த மார்ச் மாதத்தில் ரூ.1.25 கோடி வழங்கியது தெரியவந்தது.
இந்த நிலையில், தற்போது ஓய்வுபெற்ற பெண் நீதிபதி ஒருவர், யுவராஜ் என்கின்ற புகழ்பெற்ற ஜோதிட ஆசாமி தன்னிடம் ரூ. 8.80 கோடி ஏமாற்றி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கர்நாடகாவில் ஆளுநர் பதவி வாங்கித் தருவதாக ஓய்வு பெற்ற பெண் நீதிபதியிடம் யுவராஜ் சுவாமி ரூ. 8.80 கோடி பெற்று, அவரை ஏமாற்றி உள்ளது அம்பலமாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையில், குட்டி ராதிகா, யுவராஜ் சுவாமியிடம் பணம் பெற்றது தொடர்பாக விளக்கம் அளித்தார். அதில், சினிமா படத்தில் நடிப்பதற்காக, யுவராஜ் ஜோதிடரிடம் இருந்து ரூ. 75 லட்சம் சம்பளமாக பெற்றதை ஒப்புக்கொண்டவர், இந்த விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெற வில்லை என்றதுடன், போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்” என தெரிவித்தார்.
யுவராஜ், தனது குடும்பத்திற்கு சுமார் 17 வருடங்களாக குடும்ப ஜோதிடராக இருப்பதால், எதிர்காலம் குறித்து அவர் கூறிய ஜோசியம் பலித்ததாலே, யுவராஜ் மீது தங்கள் குடும்பத்திற்கு தனி மரியாதை இருப்பதாகவும் விவரித்தார்.
பிரபல நடிகையுமான குட்டி ராதிகா கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.