சென்னை

மிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் என வெளியான பட்டியல் போலியானது எனத் தமிழக பாஜக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் வரும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளன.   இந்த கூட்டணியில் இதுவரை எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதி என்பது எத்தனை இடங்கள் என்பதும் இதுவரை நிச்சயம் ஆகவில்லை.  மேலும் முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக முடிவு செய்யும் என பாஜக தலைவர்களும் அதிமுக முடிவு செய்யும் என அக்கட்சியினரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பாஜக போட்டியிடும் 38 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது. `இது மக்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அதிகாரப் பூர்வமாகத் தொகுதிப் பங்கீடு முடிவடையாத நிலையில் இவ்வாறு பட்டியல் வெளியானது அரசியல் உலகிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “பா.ஜ.க போட்டியிடத் திட்டமிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் என்ற ரீதியில், ஒரு பட்டியல் உலா வருகிறது. தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத நிலையில், பா.ஜ.,வின் வளர்ச்சி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வலிமையைத் தாங்கிக் கொள்ள முடியாத, சில தீய சக்திகள், உண்மைக்குப் புறம்பான தகவலைப் பரப்பி வருவது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தேர்தலுக்குப் பல மாதங்கள் இருக்கும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை, முறைப்படி உரிய நேரத்தில், அதிகாரப்பூர்வமாகக் கூட்டணி தலைமை அறிவிக்கும். அதன்பின் பா.ஜ க, வேட்பாளர்களை, முறையாக, தேசிய தலைமை அறிவிக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.