ரெவாரி
நேற்று டில்லிக்குச் செல்ல முயன்ற அரியானா மாநில விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசி கலைத்துள்ளனர்.
தற்போது டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் 40 நாட்களை எட்டி உள்ளது. இதுவரை 6 கட்ட பேச்சு வார்த்தை நடந்துள்ளது. கடந்த வாரம் நடந்த 6 ஆம், கட்ட பேச்சு வார்த்தையில் இரு தரப்பினருக்கும் இடையே 4 முக்கிய கோரிக்கைகள் குறித்து சமரசம் ஒப்பந்தம் இட உள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் டோமர் தெரிவித்தார். ஆனால் விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற அரசு ஒப்புக் கொள்ளவில்லை..
இன்று அடுத்த கட்ட பேச்சு வார்த்தை நடைபெற உள்ள நிலையில் இதுவும் தோல்வி அடைந்தால் ஜனவரி 6 ஆம் தேதி அன்று டிராக்டர் ஊர்வலம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். அத்துடன் போராட்டம் நடத்தி வரும், அரியானாவைச் சேர்ந்த 40 விவசாய சங்கங்கள் குடியரசு தினத்துக்குள் தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் டில்லியை நோக்கி போராட்ட ஊர்வலம் நடத்த உள்ளதாக அறிவித்தன.
இந்த போராட்ட ஊர்வலத்தில்; கலந்து கொள்ள நூற்றுக் கணக்கான விவசாயிகள் நேற்று அரியானாவின் ரிவாரி – ஆல்வார் எல்லையைக் கடக்க முயன்றனர். விவசாயிகள்: டில்லிக்கு வராமல் தடுக்க தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை உடைத்து விவசாயிகள் முன்னேறினர். அவர்களை அங்கிருந்த பாலத்தின் அருகே நிறுத்திக் கலைந்து போகச் சொல்லி காவல்துறையினர் கூறியதை கேளாததால் அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி காவல்துறையினர் கலைத்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொள்ள அரியானா விவசாயிகள் டில்லிக்கு சென்றபோது எல்லையில் காவல்துறையினர் தடுப்புக்களை வைத்திருந்தனர். போராட்டக்காரர்கள் தடுப்புக்களை ஆற்றில் வீசினர். அவர்கள் மேலும் செல்வதைத் தடுக்க கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசி காவல்துறையினர் கலைத்தனர். இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது..