பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் 10 பணியாளர்களுக்கு மேல் கொண்ட கடைகள், ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்க மாநில அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. பெண் ஊழியர்களை இரவு 8 மணிக்கு மேல் பணியாற்ற அனுமதிக்கக்கூடாது.
மேலும், ஒரு ஊழியருக்கு 8 மணி நேரம் மட்டும் பணி என்றும், கூடுதலாக 2 மணி நேரம் பணி வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை வேலைவாய்ப்பை உருவாக்குவதையும், பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் ஒரு ஷிப்ட் 10 மணி நேரத்தை தாண்டக்கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஊழியரை நாள்தோறும் 10 மணி நேரத்திற்கு மேல் பணி செய்யவிடக் கூடாது என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தது ஒருநாள் வார விடுமுறை எடுக்க உரிமை உண்டு என்றும் 8 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றினால் கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என்றும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.