கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 75 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கான அட்டை வழங்கும் முகாமை, 2 வாரங்கள் கழித்து திரும்பப் பெற்றது பாரதீய ஜனதா.
இந்த முகாமை, டிசம்பர் 13ம் தேதி தொடங்கியது அக்கட்சி. அதாவது, மாநில சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால், 75 இளைஞர்கள் வேலை பெறுவதற்கான உத்தரவாதமாக இந்த அட்டை வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது அந்த முகாம் நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மேற்குவங்க மாநில தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலிப் கோஷ் பேசியதாவது, “மக்களின் பெரும்பாலானோர், இந்த அட்டை இருந்தாலே, தங்களுக்கான வேலைவாய்ப்பு உறுதி என்று நினைத்துக் கொள்கின்றனர்.
முதலில், நாங்கள் வேலைவாய்ப்பின்மை சூழலை ஆய்வுசெய்து, அதற்கேற்ப ஒரு வேலைவாய்ப்பு கொள்கையை வடிவமைக்க வேண்டும். இத்திட்டத்தின்கீழ், அட்டைப் பெற்ற ஒவ்வொருவருக்கும் வேலை வழங்கும் பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று நினைக்கின்றனர்.
ஆனால், அனைவரும் அரசு வேலை பெறுவார்கள் என்று புரிந்துகொள்ளக்கூடாது. அது தனியார் வேலைவாய்ப்பாக இருக்கலாம் மற்றும் பலர் சுயமாக தொழில் தொடங்குவதாகவும் இருக்கலாம்” என்றார்.