திருவனந்தபுரம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை அமல்படுத்தப் போவதில்லை என கேரள சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த சட்டங்கள் பெரு நிறுவனக்களுக்க் ஆதரவாக உள்ளதாகவும் அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் டில்லியில் பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு நாடெங்கும் ஆதரவு பெருகி உள்ளது,.
இந்நிலையில் கேரள மாநில சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று தொடங்கியது. இதில் முதல்வர் பினராயி விஜயன் இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். அப்போது அவர் இந்த சட்டங்களால் நாடு சிக்கலான சூழலை எதிர் கொண்டுள்ளதாகவும் கேரள அரசு போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பாஜக அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களும் பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளதாகக் கேரள முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். வேளான் சட்டங்கள் இங்கு அமலாகாது என அறிவித்து கேரள முதல்வர் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்துக்குக் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்ததால் பெரும்பான்மை பெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.