மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியிலான அரசு நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் உரசல் ஏற்பட்டுள்ளது உள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக மாநில காங்கிரசார் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்திக்கு கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகா விகாஸ் அகாதி அரசில் இடம்பெற்றுள்ள சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி தர்மத்தை பின்பற்ற அறிவுறுத்துமாறு சோனியா காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், பாஜக சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், வெற்றி பெற்றும், அதிகாரப்போட்டி காரணமாக ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டு, கூட்டணியை விட்டு இரு கட்சிகளும் பிரிந்தன. அதைத் தொடர்ந்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் அரசாங்கத்தை அமைத்தன.
இந்த கூட்டணிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு எழுந்தாலும் கடந்த ஒராண்டுக்கு மேலாக கூட்டணி அரசாங்கம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தற்போது கூட்டணி கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு தலை தூக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக மகாராஷ்டிரா காங்கிரஸ் பொது செயலாளர் விஷ்வபந்து ராய் அந்த கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மகா விகாஸ் அகாதி அரசாங்கத்தில் காங்கிரஸ் உள்ளது. அதேவேளையில் சிவ சேனாவும், தேசியவாத காங்கிரசும்தான் ஆட்சியை நடத்துவதில் பங்காற்றுவது போல் தோன்றுகிறது. காங்கிரஸை ஒரு கரையான் போல் தேசியவாத காங்கிரஸ் பலவீனப்படுத்துகிறது. பெரும்பாலான காங்கிரஸ் அமைச்சர்கள் அடிமட்ட அளவில் அமைப்பில் எந்த பணியையும் பெறவில்லை. அதேசமயம் பொதுமக்களுக்கும், காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் நம்ம கட்சி அமைச்சர்கள் துறை தெரியாது.
கூட்டணியில் உள்ள கட்சிகள் புத்திசாலித்தனமான யுத்தி மற்றும் தங்களது சொந்த கட்சியை வளர்ப்பதில் ஈடுபடுவது ஆகியவற்றின் மூலம் நமது கட்சியை பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நாம் அதனை தடுக்க தவறி விட்டோம். 2019 தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதி அளித்த பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
நம் கட்சியிலிருந்து தொண்டர்கள் வெளியேறுவதை தவிர்க்க சில அவசியமான உறுதியான நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். கூட்டணி தர்மத்தை பின்பற்றும்படி சிவ சேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு அறிவுறுத்துவது அவசியம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.