புதுடெல்லி:
கொரோனா தடுப்பூசி பணிகளுக்கான ஒத்திகை வெற்றி பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசியை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு தீவிர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன
இங்கிலாந்தை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ‘ஆஸ்ட்ராஜெனகா’ நிறுவனமும் இணைந்து, கொரோனாவுக்கான தடுப்பூசியை தயாரித்துள்ளது. இதை, நம் நாட்டில் பரிசோதித்து, தயாரிக்கும் பொறுப்பை, மராட்டிய மாநிலத்தை சேர்ந்த, சீரம் இந்தியா நிறுவனம் ஏற்றுள்ளது.
இந்த தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி, அடுத்த மாதம் வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தடுப்பூசி வழங்கும் பணிகளுக்கான நடைமுறைகளை, சோதனை ஓட்ட அடிப்படையில் செய்து பார்க்க, மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி, பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத் ஆகிய 4 மாநிலங்களில், தலா 2 மாவட்டங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சோதனை ஓட்ட பயிற்சிகள் நடந்தது.
தடுப்பூசி வழங்கும் பணிகளுக்காக, ‘கோ வின்’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பயனாளர்களின் தகவல்களை பதிவேற்றுவதில் துவங்கி, தடுப்பூசி வைக்கப்படும் குளிர்பதன கிடங்கு பரிசோதனை, அங்கிருந்து, தடுப்பூசி மையத்திற்கு மருந்துகளை எடுத்து வருவது உள்ளிட்ட நடைமுறைகள், இந்த சோதனை ஓட்ட பயிற்சியின் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சோதனை ஓட்ட முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்துவதை தவிர, மற்ற அனைத்து பணிகளில் உள்ள நடைமுறை சிக்கல்களை கண்டறிந்து, அதை முன்கூட்டியே களையவே, இந்த ஒத்திகை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.