லாகூர்: ஐசிசி அறிவித்துள்ள கடந்த பத்தாண்டு காலத்திற்கான சிறந்த டி-20 சர்வசேத அணியில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர்கூட இடம்பெறாதது குறித்து தனது கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர்.
ஐசிசி அமைப்பு, சர்வசேத டி-20 அணியை அறிவிப்பதற்கு பதிலாக ஐபிஎல் அணியை அறிவித்துள்ளது என்றும் அவர் கிண்டலடித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “ஐசிசி அமைப்பில் பாகிஸ்தானும் ஒரு உறுப்பினர் என்பதை அந்த அமைப்பு சுத்தமாக மறந்துவிட்டது. பாகிஸ்தானியர்களும் டி-20 கிரிக்கெட் ஆடுகிறார்கள். பாபர் ஆஸமை அவர்கள் அந்தப் பட்டியலில் கட்டாயம் சேர்த்திருக்க வேண்டும்.
தற்போதைய நிலையில், உலக டி-20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவர் பாபர் ஆஸம். அவரின் சராசரிகள், விராத் கோலியை விட சிறப்பாக இருப்பதைப் பார்க்க முடியும்.
அவர்கள், உண்மையில் ஐபிஎல் அணியைத்தான் அறிவித்துள்ளார்கள். எனவே, அவர்களின் மதிப்பீடு குறித்து நாங்கள் கவலைப்படத் தேவையில்லை என்றே நான் நினைக்கிறேன்” என்றுள்ளார் அக்தர்.