டில்லி
உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கொரோனா பாதிப்புக்காக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உத்தரகாண்ட் முதல்வராக திர்வேந்திர சிங் ராவத் பதவி வகித்து வருகிறார். கடந்த 18 ஆம் தேதி அன்று இவருக்கு லேசான ஜுரம் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையில் கொரோனா உறுதி ஆனதால் இவர் டேராடூனில் உள்ள டூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கபடது. நேற்று இவருக்கு மீண்டும் ஜுரம் வந்துள்ளது.
இதையொட்டி அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்குச் சிகிச்சை தொடரப்பட்டுள்ளது. அவருக்கு நெஞ்சக தொற்று உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டூன் மருத்துவமனையின் கொரோனா கட்டுப்பாடு மருத்துவ அதிகாரி அனுராக் அகர்வால் முதல்வர் ராவத் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதால் அவருடைய உடல்நிலை குறித்துக் கவலைப்பட வேண்டாம் என அறிவித்துள்ளார்.,
உத்தரகாண்ட் முதல்வர் அலுவலக அதிகாரிகளுக்குத் தொற்று கண்டறியப்பட்டதால் ஏற்கனவே அவர் ஆகஸ்ட் மாதம் சுய தனிமையில் இருந்தார். அதன் பிறகு மேலும் மூன்று உதவியாளர்களுக்கு தொற்று ஏற்பட்டதால் செப்டம்பர் மாதத்திலும் அவர் மீண்டும் சுய தனிமையில் இருந்துள்ளார். ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் இரு அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.