சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு தடை விதித்த கடலூர் ஆட்சியரின் உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் விஷ்ணுதாஸ் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவாதிரை பண்டிகையன்று லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக குவிந்து விடுவார்கள். ஆனால், இந்த ஆண்டு கொரோனா நோய்த் தொற்று காரணமாக, சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்துக்கு, வெளி மாவட்ட, மாநில பக்தர்களை அனுமதிப்பது இல்லை என மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து அறிவித்துள்ளது.
பக்தர்களுக்கு அனுமதி வழங்காதது மிகப்பெரிய மனவேதனையை அளித்துள்ளது. எனவே, வெளி மாவட்ட, மாநில பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும். அரசு விதிக்கும் வேறு எந்த நிபந்தனைகளையும் தீவிரமாக கடைபிடிக்க தயாராக உள்ளதாக மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரும் 27ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.