சென்னை: தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் மாநிலத்தலைவராக ‘தினமலர்’ கோபால்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மாநில விசுவ இந்து பரிஷத் தலைவராக இருந்த ராமகோபாலன் மறைவைத்தொடர்ந்து, தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில், நசென்னை தியாகராயநகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் விசுவ இந்து பரிஷத் பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக, அகில உலக முன்னாள் செயல்தலைவர் வேதாந்தம் கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர். அதன்படி, தற்போதைய மாநிலத்தலைவர் ரத்தினசாமி போஷகராகவும், புதிய மாநில தலைவராக தினமல் ஆர்.ஆர்.கோபால்ஜியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொதுச்செயலாளராக சோமசுந்தரம், துணைத் தலைவர்களாக கிரிஜா சேஷாத்திரி, ஆர்.பி.கிருஷ்ணமாச்சாரி, எம்.ஜெ.துளசிராம், கவுசிக் என் சர்மாவும், செயல் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.செல்லமுத்து, இணை பொதுச்செயலாளர்களாக கோவை வக்கீல் கே.விஜயகுமார், மதுரை வக்கீல் சந்திரசேகரன், சென்னை வக்கீல் என்.கணேசன், சென்னையைச் சேர்ந்த ஆர்.கணபதி ராமசுப்பு, பொருளாளராக சபரி குரூப் கம்பெனிகள் அதிபர் சசிகுமார் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் உள்ள எல்லா கோவில்களிலும் கொரோனாவை காரணம் காட்டி பக்தர்களின் தரிசனத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. தீர்த்தம், பிரசாதம் கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை உடனடியாக நீக்கப்பட வேண்டும். முன்பு இருந்தது போல் எல்லா கோவில்களிலும் உற்சவங்களும், விழாக்களும் சிறப்பாக நடைபெறவும், பக்தர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் தரிசனம் செய்யவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவில் சொத்துகளை எக்காரணம் கொண்டும் பிறகாரியங்களுக்கு பயன்படுத்தக்கூடாது. இதுகுறித்து கோர்ட்டு பலமுறை அறிவுறுத்தியபோதும், கோவில் சொத்துகள் ஆக்கிரமிப்பு நின்றபாடில்லை. எனவே கோவில் சொத்துகளை ஆக்கிரமிக்க அரசு உடந்தையாக இருக்கக்கூடாது. ஏற்கனவே, ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் சொத்துகளை மீட்டெடுத்து, அக்கோவில்களுக்கே வழங்க வேண்டும்.
கிராமக்கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தியது போலவே, எல்லாப் பூசாரிகளுக்கும் மாத ஊக்கத்தொகை என்ற அறிவிப்பையும் அரசு செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.