ராஜகுருக்கள் மன்னராட்சி காலத்தில் மட்டுமல்ல; முதலாளித்துவ ஜனநாயக ஆட்சிக் காலத்திலும் பல சூழல்களில், பல வடிவங்களில் தொடர்கிறார்கள்.
தமிழ்நாட்டில், மறைந்த ‘துக்ளக் சோ’, பலநேரங்களில் ஜெயலலிதா உள்ளிட்ட சிலருக்கு ராஜகுருவாக திகழ்ந்துள்ளார். அவருக்கான கருத்தியலில் அவர் உறுதியாக இருந்தாலும், பெரியளவிலான வெறுப்பை அவர் சம்பாதித்துக் கொள்ளவில்லை என்றே கூறலாம்.
ஆனால், அவருக்குப் பிறகு அவரின் பத்திரிகைக்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கும் ஆடிட்டர் ஒருவர், அந்த ராஜகுரு என்ற அந்தஸ்தை, சோ மறைவுக்குப் பிறகான காலத்தில், தனக்கானதாக தக்கவைத்துக் கொள்வதில் பெரும் முனைப்புக் காட்டி வருகிறார். வெளிப்படையாக பலரின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொள்கிறார்.
இவர் ஏற்கனவே ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர் என்ற பெயரைப் பெற்றவர். தொடர்ச்சியாக பல ஆலோசனைகளை, தமிழ்நாடு அரசியல் தொடர்பாக பாரதீய ஜனதாவின் டெல்லி தலைமைக்கு வழங்கி வருபவர்.
ஆனால், அதிமுகவில் நெடுங்காலமாக கோலோச்சிய முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த சசிகலாவுக்கு எதிராக, அதே முக்குலத்து சமூகத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வத்தை பாரதீய ஜனதா தேர்வுசெய்தபோது, அவர்களுடைய அரசியல் வியூகத்தில் பெரிய சறுக்கல் உணரப்பட்டது. என்ன, ராஜகுரு இப்படியானதொரு ஆலோசனையை வழங்கிவிட்டாரே என்று என்னைப் போன்றவர்கள் நினைத்தனர்.
இருவரும்(சசிகலா & பன்னீர்) ஒரே சாதி என்பதால், எடப்பாடி பழனிச்சாமிக்கு உடனடியாக உருவான ஒரு சாதிய லாபியைப் போன்று, பன்னீர் செல்வத்திற்கு உருவாகவில்லை. பாரதீய ஜனதாவின் எண்ணமும் அப்போதைக்கு நினைத்தபடி ஈடேறவில்லை.
அதன்பிறகு, அந்தப் புதிய ராஜகுருவின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் பலன் தரவில்லை. ஆனால், தற்போது அதே ராஜகுருவின் ஆலோசனையின் பேரில்தான் ரஜினி களமிறக்கப்பட்டுள்ளார். அவர் கட்சித் தொடங்குவது இன்னும் 100% உறுதியாகவில்லை என்றாலும், அவரைச் சுற்றி பெரியளவில் விளம்பர வட்டம் சுழல்கிறது.
அனேகமாக, இந்த முயற்சி, அந்த ராஜகுருவின் அரசியல் அறிவுத்திறனுக்கான கடைசிக்கட்ட பரிசோதனையாக இருக்கலாம். இதிலும் அவர் தோற்றால், அதற்குப்பிறகு அவரின் சொல் டெல்லியில் அம்பலம் ஏறுமா? என்பது சந்தேகமே!