சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, கடந்த 9 மாதங்களாக கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், 2021 ஜனவரியில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக 202 மார்ச் 21ந்தேதி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டன. இதையடுத்து, ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டதால், தனியார் பயிற்சி மையங்கள், பாலிடெக்னிக்குகள்திறக்கப்பட்டன. அதேபோல, டிசம்பர் 2ந்தேதி முதல், கல்லுாரிகளில் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கும், டிசம்பர் 7ந்தேதி முதல் இளநிலை, முதுநிலை உள்ளிட்ட அனைத்து இறுதியாண்டு மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகள் கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து நடத்தப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி முதல் அனைத்து வகுப்புகளும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், தமிழகத்தில், பள்ளி, கல்லூரி மாணாக்கர்களின் எதிர்காலத்தை பற்றி அரசு சிந்திக்காமல், மாநில அரசும், எதிர்க்கட்சிகளும், தமிழக சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, மாறுப்பட்ட கருத்துக்களை கூறி, சர்ச்சைகளை ஏற்படுத்தி, கல்வி நிறுவனங்கள் திறப்பது தவிர்க்கப்பட்டு வருகிறது. இது பெற்றோர்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்திலும் பள்ளிகளையும் திறப்பது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுவாக, இந்த டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு முடிந்து, விடுமுறை விடப்படும் காலம் என்பதால், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினம் மற்றும் பொங்கல் திருவிழாவையும் முடித்து, ஜனவரி 18ந்தேதி முதல் பள்ளிகளை முழுவதுமாக திறக்கலாம் என அதிகாரிகள் மட்டத்தில் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, தமிழக பள்ளிகல்வி முதன்மைசெயலர் தீரஜ்குமார் தலைமையில், பள்ளி கல்வித்துறை இயக்குனர்கள் கண்ணப்பன், பழனிச்சாமி, கருப்பசாமி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி இருப்பதாகவும், தொடர்ந்து, சுகாதாரத்துறையுடன் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜனவரி 4ந்தேதி முதல், 10, 11, 12ம் வகுப்புகளுக்கு முழுமையாக பள்ளிகளை திறக்கவும், மற்றவர்களுக்கு ஜனவரி 18ந்தேதி முதல் பள்ளிகளை திறக்கவும் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பள்ளிகளை ஷிப்டு வாரியாக திறக்கலாமா என்பது குறித்தும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கவும் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, விரைவில், கல்வி அமைச்சர் மற்றும் முதல்வர் எடப்பாடியுடன் விவாதித்து, அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.