துபாய்:
வேலை இல்லாத இந்தியர் துபாயில் 1 மில்லியன் டாலரை வென்றுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக வேலையை இழந்த இளைஞர் ஒருவர் துபாய் டூட்டி பிரீ(DDF) மில்லினியம் மில்லியனர் டிராவில் ஒரு மில்லியன் டாலர்களை வென்றுள்ளதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
கேரளாவிலிருந்து துபாய்க்கு குடியேறிய இந்தியரான நவநீத சஜீவன்(30) என்ற இளைஞர், அபுதாபியை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
நவநீத சஜீவன் திடீரென்று ஒரு மில்லியன் டாலர் வென்றுள்ளதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார், இதைப் பற்றி பேசிய நவநீத் சஜீவன் தெரிவித்துள்ளதாவது: கேரளாவில் உள்ள காசர்கோடு தான் என்னுடைய சொந்த ஊர், கொரோனா காரணத்தால் திடீரென்று நான் பணி நீக்கம் செய்யப் பட்டேன், இதையடுத்து நேற்று ஒரு வேலைக்கான நேர்காணல் முடித்துவிட்டு வந்தேன், அதே நேரத்தில் எனக்கு டிடிஎஃப் இல் இருந்து நான் ஒரு மில்லியன் டாலரை வென்றுள்ளதாக தொலைபேசி மூலம் தெரிவித்தனர். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதற்கான டிக்கெட்டுகளை நான் நவம்பர் 22 ஆம் தேதி ஆன்-லைன் மூலம் வாங்கினேன்.
என் மனைவி இன்னும் இங்கே வேலை செய்துகொண்டிருக்கிறார், எனக்கு வேலை கிடைக்கவில்லை என்றால், நான் வீட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தேன் ஆனால் எனக்கு இந்த வெற்றி இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
நவநீத் சஜீவன் டிடிஎஃப் மெகா பரிசு வென்ற 171 வது இந்தியர் ஆவார், மேலும் டிடிஎஃப் மில்லினியம் மில்லியனர் டிக்கெட் வாங்குபவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்களாக உள்ளனர்.