சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவரான, சுதாகரனை விடுதலை செய்ய நீதிமற்ம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் அவர் எந்த நேரத்திலும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமானத்தை மீறி, சொத்துகுவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும், பெங்களூரு பரப்பனஅக்ரஹாராவில் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்களின் சிறைவாசம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதையடுத்து, அவர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகையை செலுத்தியதும், அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சிறை விதிகளின்படி சசிலா அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 27-ந் தேதி தான் விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடக சிறைத்துறை கூறி விட்டது. அதை கர்நாடக உள்துறையும் உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், சொத்துகுவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் சுதாகரன், முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக 92 நாட்கள் சிறைவாசம் அனுபவித்து இருப்பதை சுட்டிக்காட்டி, அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரபரப்பு தீர்ப்பை வழங்கினார். தீர்ப்பில், சொத்துகுவிப்பு வழக்கில் ஏற்கனவே 92 நாட்கள் சிறைவாசம் அனுபவித்ததாலும், 89 நாட்களுடன் அவரது தண்டனை காலம் நிறைவு பெற்றிருப்பதாலும், சுதாகரனை விடுதலை செய்யலாம் என சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். சுதாகரன், அபராத தொகையை செலுத்தியதும், அவரை உடனே விடுதலை செய்யவும் நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில், நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையை, சசிகலா, இளவரசி தரப்பில் செலுத்தப்பட்டு விட்டது. ஆனால், சுதாகரன் தரப்பில் இதுவரை செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, சுகதாரன் செலுத்த வேண்டிய ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதம் செலுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அவரது வழக்கறிஞர்கள் அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும், ஓரிரு நாளில், அபராதத்தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு விடும் என்றும், அதையடுத்து உடனே சுதாகரன் விடுதலையாக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.