டில்லி

ந்தியாவில் பெட்ரோலின் விலையில் 63% வரை மத்திய மாநில அரசுகளுக்கு விற்பனை வரியாக உள்ளன.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் தினசரி  மாற்றிக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளன.  இந்த விலை சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயம் செய்வதாக சொல்லப்படுகிறது.   ஆனால் சமீபத்தில் கச்சா எண்ணெய் விலையில் கடும் சரிவு ஏற்பட்ட போதிலும் விலை குறையவில்லை.

இதற்கு முக்கிய காரணம் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்படும் விற்பனை வரி என கூறப்படுகிறது.  உதாரணமாகக் கடந்த 2015-1 ஆம் வருடம் கச்சா எண்ணெய் விலை சரிந்த போது விற்பனை வரி உயர்வு காரணமாக விலை குறையவில்லை.   ஆனால் 2017 முதல் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போது விற்பனை வரி விகிதம் குறைக்கப்படாததால் விலையும் உயர்ந்தது.

குறிப்பாக பெட்ரோல் அடிப்படை விலை குறையும் போது விற்பனை வரிகள் உயர்வு அறிவிக்கப்படுவதால் விலை உயர்வு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   உதாரணமாக டில்லியில் 2014 ஆம் வருடம் மே மாதம் அடிப்படை விலை ரூ.47.12 ஆக இருந்த போது லிட்டர் விலை ரூ.71.41 ஆக இருந்தது.   ஆனால் டிசம்பர் 2020ல் அடிப்படை விலை ரூ.26.71 ஆக உள்ள போது பெட்ரோல் விலை லிட்டர் ரூ.82.34 ஆகி உள்ளது.

இதற்குக் காரணம் 2014 ஆம் வருடம் மே மாதம் மத்திய அரசு விற்பனை வரி 14% ஆகவும், மாநில விற்பனை வரி 17% ஆகவும் டீலர் கமிஷன் 3% ஆகவும் இருந்தது.  தற்போது அதாவது 2020 டிசம்பர் மாதம் 40% மத்திய விற்பனை வரி ஆகவும், 23%  மாநில விற்பனை வரி ஆகவும் டீலர் கமிஷன் 4% ஆகவும் உயர்ந்துள்ளது.  தற்போது 63% மத்திய மாநில அரசுகளுக்கு விற்பனை வரியாகச் செலுத்தப்படுகிறது. 

அது மட்டுமின்றி இந்தியாவில் மற்ற நாடுகளை விட பெட்ரோலுக்கு அதிக அளவில் பணம் செலவழிக்கப்படுவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சராசரியாக ஒரு நாள் வருமானத்தில் 17% பெட்ரோல் மற்றும் டீசலுக்கு செலவாகிறது.  அதே வேளையில் மற்ற நாடுகளில் 10% க்கும் குறைவாகவே செலவிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்..