சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேற்று நடத்தப்பட்ட கொரோனா சோதனையில், வேறு எந்தவொரு மாணவருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதுவரை 6 முதுநிலை மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு  உறுதியானதால், அண்ணா பல்கலைக்கழகத்திடம் உயர்கல்வித்துறை   விளக்க அறிக்கை கேட்டுள்ளது.

தமிழகம் முழுவதும இறுதியாண்டு மாணாக்கர்களுக்காக கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.  இதனால் சென்னை உள்பட சில பகுதிகளில், கொரோனா நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்காததால், மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.  சென்னை  ஐ.ஐ.டி.யில் இதுவரை  191 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திலும் 6 மாணவர்களுக்கு தொற்று பரவி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி படிக்கும் மாணவர்கள் சிலருக்கு அறிகுறி இருந்ததால் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் முதுநிலை மாணவர்கள் 6 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. ஆனால், அவர்களிடம் எந்தவித அறிகுறியும் தென்படவில்லை என டீன் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து அனைத்து விடுதி மாணவர்களுக்கும் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இதில் வேறு எந்தவொரு மாணவருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இதனால், மாணவர்கள், ஆசிரியர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.