சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை வழங்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளன. அதற்கான அரசாணை விரைவில் தமிழகஅரசு வெளியிடும் என்றும், அதன்மூலம், ரூ.962 கோடி அளவிலான பணப்பலன்களை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் ஓய்வூதியம் உள்பட அவர்களுக்குரிய பணப்பலன்கள் வழங்கப்படாமல் உள்ளது. போக்குவரத்துத்துறை நஷ்டத்தில் இயங்குவதாக கூறி, அவர்களுக்குரிய பணப்பலன்கள் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. கடந்த , கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு போக்குவரத்து கழகங்களில் ஓய்வு பெற்றுள்ளனர். ஓய்வூதியம், நிலுவைத் தொடர்பாக ஏற்கனவே பலக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
மேலும், 14-வது புதிய ஊதிய ஒப்பந்தம் போடுவது குறித்து தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. வேலைநிறுத்த நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளதால், போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழகஅரசு எடுத்து வருகிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், முதல்கட்டகமாக, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வுகால பணப்பலன்களை வழங்க தமிழகஅரசு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார், ரூ.962 கோடி அளவிலான பணப்பலன்களுக்கான அரசாணை சில நாட்களில் வெளியாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அதைத்தொடர்ந்து, 14-வது புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்தும் அடுத்தடுத்து நடக்கும் பேச்சுவார்த்தைகள் மூலம் சுமுகத் தீர்வு காணப்படும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
அரசின் சுமூகமான பேச்சுவார்த்தை மற்றும் தகவல்கள் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.