சென்னை: இலவச நாப்கின் வழங்க ரூ.44 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாதவிலக்கு காலகட்டத்தில் பெண்கள் சுத்தத்தை ஊக்குவிக்க வளரிளம் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கான மாதவிடாய் சுகாதாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுக்கும், கிராமப்புறங்களில் உள்ள வளரிளம் பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கிராமப்புற வளரிளம் பெண்களுக்கிடையே செயல்படுத்தப்பட்டு வரும் “மாதவிடாய் கால தன் சுகாதாரத் திட்டம்” ரூ.37.47 கோடியில் நகர்ப்புற பள்ளி மாணவியர்களுக்கும் விரிவுபடுத்தப்படும், அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் பெண்களுக்கும் சானிடரி நாப்கின்கள் வழங்கப்படும் என்று 2020-21ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி, நகர்ப்புற அரசுப் பள்ளி மாணவிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் பெண்களுக்கு இலவச நாப்கின்கள் வழங்க ரூ.44 கோடியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.