கொல்கத்தா :
ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். என்ற முஸ்லிம் கட்சி செயல்படுகிறது.
அண்மையில் நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட ஒவைசி கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது.
முஸ்லிம்கள் பெருமளவில் வசிக்கும் சீமாஞ்சல் பகுதியில் ஒவைசி கட்சி ஓட்டுகளை பிரித்ததால் ஆர்.ஜே.டி. கூட்டணி ஆட்சிக்கு வர இயலாமல் போனது.

பீகார் வெற்றியால் உற்சாகமடைந்த ஒவைசி “அடுத்த ஆண்டு நடைபெறும் மே.வங்க சட்டப்பேரவை தேர்தலில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி போட்டியிடும்” என அறிவித்துள்ளார்.
அந்த மாநிலத்தில் 30 சதவீத வாக்குகளை வைத்துள்ள முஸ்லிம்கள் நூறு தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர்.
இந்த நிலையில் பா.ஜ.க.வுக்கு எதிரான முஸ்லிம் வாக்குகளை சிதற அடிக்கும் எண்ணத்தில் ஒவைசி கட்சியை, மே.வங்காள மாநிலத்துக்கு பா.ஜ.க. இழுத்து வருவதாக அந்த மாநில முதல்-அமைச்சரும் திரினாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
அங்குள்ள ஜபைல்குரி என்ற இடத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “முஸ்லிம் ஓட்டுகளை உடைக்கும் நோக்கத்தில் ஐதராபாத்தில் இருந்து ஒவைசி கட்சியை கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து மே.வங்கத்துக்கு பாரதிய ஜனதா கட்சி அழைத்து வருகிறது” என குற்றம் சாட்டினார்.
“ஒவைசி கட்சி, பா.ஜ.க.வின் “பி அணி” என்று குறிப்பிட்ட மம்தா பானர்ஜி” இந்த தேர்தலில் இந்து ஓட்டுகளை பா.ஜ.க.வும், முஸ்லிம் ஓட்டுகளை ஒவைசி கட்சியும் விழுங்கிவிட வேண்டும் என்ற திட்டத்துடன் பா.ஜ.க. தலைவர்கள் செயல்படுகின்றனர்” என தெரிவித்தார்.
– பா. பாரதி