குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, “தி பிரெஸிடன்சியல் இயர்ஸ்” (THE PRESIDENTIAL YEARS) என்ற பெயரில் தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ளார். ஏற்கனவே இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு வெளிவந்து விட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் பிரணாப் முகர்ஜி மரணம் அடைந்த நிலையில், இந்த புத்தகத்தின் இறுதி பதிப்பை அடுத்த மாதம் வெளியிட ரூபா பதிப்பகத்தார் முடிவு செய்துள்ளனர்.

இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சில விஷயங்கள், அண்மையில் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் “இந்த புத்தகத்தை இப்போது வெளியிட வேண்டாம்” என பிரணாப் முகர்ஜியின் மகனும், காங்கிரஸ் முன்னாள் எம்..பி.யுமான அபிஜித் முகர்ஜி, ரூபா பதிப்பகத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

“இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தகவல்களை நான் படித்து ஆய்வு செய்து எழுத்து பூர்வமாக சம்மதம் தெரிவித்த பிறகே இதனை வெளியிட வேண்டும்” என அபிஜித் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கு பிரணாப் முகர்ஜியின் மகள் ஷார்மிஸ்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.

“எனது தந்தை எழுதியுள்ள புத்தகத்தை வெளியிட தேவையில்லாமல் தடைகளை ஏற்படுத்த வேண்டாம். இவ்வாறு செய்வது, மலிவான விளம்பரம்” என ஷார்மிஸ்தா, தனது சகோதரரை ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் நூலை வெளியிட அவரது, வாரிசுகள், சண்டையிட்டுகொள்வதால், பதிப்பகத்தார், தர்ம சங்கடத்தில் ஆழ்ந்துள்ளனர்.

– பா. பாரதி