தூத்துக்குடி: பிரசித்திப்பெற்ற முருகன் கோவிலான திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல் மூலம் 1 கோடியே 80 லட்சத்து 54 ஆயிரத்து 851 ரூபாயும், தங்கம் 1,009 கிராம், வெள்ளி 22,520 கிராம் காணிக்கையாக கிடைத்துள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா காலத்திலும், பக்தர்கள் தங்கள வேண்டுதலை நிறைவேற்றி வருவதால், வருமானம் குவிந்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த கோவில்கள் அனைத்தும் 5 மாதங்களாக மூடப்பட்ட நிலையில், பின்னர் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக, கடந்த செப்டம்பர் மாதம் 1ந்தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் கோவிலக்கு வந்து சாமி தரிசனம் பெற்றுச்செல்கின்றனர்.
இந்த நிலையில், திருச்செந்தூரிலும் பக்தர்கள் முருகனை கண்டு ஆசி பெற்று செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருவாய் மாதமிருமுறை எண்ணப்பட்டு வருகிறது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், நேற்று கோவில் உண்டியல் எண்ணிக்கை திருக்கோவில் கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருக்கோயில் இணை ஆணையா் (பொ) சி.கல்யாணி தலைமையில் உதவி ஆணையா்கள் தூத்துக்குடி சு.ரோஜாலி சுமதா, திருச்செந்தூா் வே.செல்வராஜ், ஆய்வா்கள் மு.முருகன், பூ.நம்பி, ச.சிவலோகநாயகி, தக்காா் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் ஆகியோா் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தா் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப் பணிக்குழுவினா் மற்றும் கோவில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
அதன்படி, கோவில் நிரந்தர உண்டியல்களில் ரூ.1கோடியே 80 லட்சத்து 54 ஆயிரத்து 851, தங்கம் 1,009 கிராம், வெள்ளி 22,520 கிராம் காணிக்கையாக கிடைத்துள்ளது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.