டில்லி

விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகத் தாம் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாக அன்னா ஹசாரே மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

கடந்த அண்டு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே விவசாயிகளின் நலனுக்காக அமைக்கப்பட்ட எம் எஸ் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதம் இருந்தார்.  அப்போதைய வேளான் அமைச்சர் ராதா மோகன் சிங் மற்றும்  அப்போதைய மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் ஆகியோர் இதற்காக ஒரு உயர்மட்டக் குழு அமைத்து அதன் பரிந்துரையின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதை ஏற்ற அன்னா ஹசாரே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி  உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.   ஆனால் மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் எவ்வித கோரிக்கையையும் நிறவேற்றாமல் இருந்துள்ளது,.  மேலும் புதிய வேளாண் சட்டங்களை இயற்றியதையொட்டி விவசாயிகள் போராட்டமும் தீவிரமாக தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் அன்னா ஹசாரே மத்திய வேளாண் அமைச்சருக்கு எழுதி உள்ள கடிதத்தில், “சென்ற வருடம் எனது கோரிக்கைகளைப் பரிசீலிக்க அமைக்கப்படுவதாக சொன்ன உயர்மட்டக் குழு இதுவரை அமைக்கப்படவில்லை.  அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.  மாறாக புதிய வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டு அதைத் திரும்பப் பெற விவசாயிகள் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என நான் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.  அவ்வாறு ஏற்காவிட்டால் நான் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன்.  இந்த போராட்டத்துக்கான தேதி, இடம் ஆகியவை குறித்து விரைவில் அறிவிக்க உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.