அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளது.
இந்த குக்கர் சின்னம், 2017ம் ஆண்டு நடைபெற்ற ஆர்கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலின்போது இவருக்கு குக்கர் சின்னம்தான் ஒதுக்கப்பட்டது. அச்சின்னத்தை வைத்து, அத்தேர்தலில் பிரமாண்ட வெற்றியை ஈட்டினார் தினகரன்.
ஆனால், அதற்கடுத்து வந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அவருக்கு விரும்பிய குக்கர் சின்னம் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக பரிசுப் பெட்டி சின்னம்தான் கிடைத்தது. ஆனால், அந்த சின்னத்தை வைத்தே, மொத்தம் 5% வாக்குகளுக்கு மேலாக பெற்றது அமமுக.
ஆனால், தற்போது மிக முக்கியமான சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு அவருக்குப் பிடித்தமானதாக கூறப்படும் குக்கர் சின்னம் மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பலரும் யூகிப்பதன் அடிப்படையில், அவரின் கட்சி அதிமுகவுடன் இணையுமா? அதற்கு சசிகலா தலைமை ஏற்பாரா? என்பவற்றை சற்றுப் புறம்தள்ளி வைத்துவிட்டு, அமமுக குக்கர் சின்னத்தில் ஒருவேளை போட்டியிடுவதாக வைத்துக்கொண்டால், உண்மையிலே அந்தக் கட்சி நாடாளுமன்ற தேர்தலோடு ஒப்பிடுகையில், அதிகளவிலான வாக்குகளைப் பெறும்.
அந்தக் கட்சிப் பெறுகின்ற வாக்குகள் அதிமுகவிற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் ஒரு எளிதான கணிப்பே!
அதேசமயம், திமுகவிற்கு வாக்களித்துவரும் முக்குலத்தோரில் ஒரு பகுதியினரும், தினகரனுக்கு மாற்றி வாக்களிப்பார்கள் என்ற கருத்து ஏற்கக்கூடிய வாதமாக இல்லை. ஏனெனில், அதிமுகவில் சசிகலா கோலோச்சிய காலத்திலேயே, அந்த குறிப்பிட்ட சதவிகிதத்தினர், எப்போதும் திமுகவுக்கே வாக்களித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.