சென்னை
ரஜினிகாந்த் மக்கள் சேவை கட்சி என்னும் பெயரில் புதிய கட்சி தொடங்கி உள்ளதாகவும் ஆட்டோ ரிக்ஷா சின்னம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக அறிவித்ததில் இருந்தே ஊடகங்களில் அவர் முதல்வராவார் என்னும் எதிர்பார்ப்பு தகவல்கள் வெளியாகின. மேலும் அவர் பாபா படத்தில் பயன்படுத்திய பாபா முத்திரை கட்சியின் சின்னமாக இருக்கும் எனவும் ஊகங்கள் கிளம்பின. ஆனால் ஜனவரி பிறக்கும் முன்பே கட்சி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஜினிகாந்த் அறிவிக்க உள்ள கட்சியின் பெயர் மக்கள் சேவை கட்சி எனவும் அதன் சின்னம் பாட்ஷா படத்தில் ரஜினிக்குப் பெயர் பெற்றுத் தந்த ஆட்டோ ரிக்ஷா எனவும் தேர்தல் ஆணைய அறிவிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால் இந்த தகவல்கள் சரியானவை அல்ல என ரஜினி மக்கள் மன்றம் மறுத்துள்ள நிலையில் இந்த கட்சியைப் பதிவு செய்தவரே அந்த மன்றத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது.
இந்த கட்சி அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம் என்னும் பெயரில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி வடசென்னையில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்சியின் தலைவராக எஸ் பி ஜேம்ஸ், பொதுச் செயலராக ஆண்டனி ஜோ ராஜா மற்றும் பொருளாளராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் பெயர் கட்சி பதிவு விண்ணப்பதாரர் அல்லது பொறுப்பாளர் என எங்கும் குறிப்பிடப்படவில்லை
கடந்த செப்டம்பர் மாதம் இந்த கட்சியின் பெயர் மக்கள் சேவைக் கட்சி என மாற்றப்பட்டுள்ளது. இந்த கட்சியின் பழைய பெயரில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது புதிய கட்சியின் பெயரில் சின்னம் ஒதுக்கீடு கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.