
பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், மும்பை – ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதிய போட்டி, 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
ஆட்டம் துவங்கிய 9வது நிமிடத்திலேயே, ஜாம்ஷெட்பூர் அணியின் நெரிஜஸ் வால்ஸ்கிஸ் ஒரு கோலடித்து மும்பைக்கு அதிர்ச்சியளித்தார்.
ஆனால், விரைவிலேயே சுதாரித்துக் கொண்ட மும்பை அணி, 15வது நிமிடத்தில் பதிலடி கொடுத்தது. அந்த அணியின் பார்தலோமெவ் ஒரு கோலடித்து, ஆட்டத்தை தற்காலிகமாக சமன் செய்தார்.
அதேசமயம், இரண்டாவது பாதி ஆட்டத்தின் 79வது நிமிடத்தில், ஜாம்ஷெட்பூர் அணியின் வால்ஸ்கிஸ் அடித்த கோல் ஆஃப் சைடு கோல் என்று அறிவிக்கப்பட்டதால், அந்த அணிக்கு பெரிய ஏமாற்றம் கிடைத்தது.
மேலும், தொடர்ச்சியாக, இரு அணியினரும் கோலடிக்க கடுமையாக முயன்றனர். ஆனால், எதுவும் நடக்காத காரணத்தால், ஆட்டம் இறுதியில் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது.