சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, கடந்த 9 மாதங்களாக மூடப்பட்ட மெரினா நேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு மக்கள் கூடத்தொடங்கி உள்ளனர். இன்று காலை, ஏராளமான பொதுமக்கள், அதிகாலையிலேயே அங்கு வந்து நடைபயிற்சியிலும், உடற்பயிற்சியிலும் ஈடுபட்டனர்.  ஒருவருக்கொருவர் தங்களது நட்பை பகிர்ந்துகொண்டனர்.

சென்னை வாழ்மக்களின் சுற்றுலாத்தலம் மெரினா பீச். ஏழை எளிய மக்கள் குடும்பத்துடன் வந்து விலையில்லாப் பொழுதுபோக்கு இடம் மெரினா கடற்கரை. இதனால், அங்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் கூடுவது வழக்கம். விடுமுறைக் காலம், கோடை காலம், பண்டிகைக் காலங்களில் கூட்டம் அலைமோதும். எப்போதுமே பரபரப்பாக இருக்கும் மெரினா கடற்கரையில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 9 மாதங்களாக மக்கள் அனுமதி மறுக்கப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்டது.

இந்த நிலையில், டிசம்பர் 14ந்தேதி முதல் சென்னையின் மிக முக்கிய சுற்றுலா தலமான மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து  நேற்று மாலையே ஏராளமான பொதுமக்கள் மெரினா கடற்கரையில் திரண்டனர். கடலில் கால் நனைத்தும், குளித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இன்று காலையில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் உற்சாகத்துடன் உடற்பயிற்சி, நடைபயற்சி மேற்கொண்டனர். இளைஞங்கள் ஆங்காங்கே விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதேபோல் திருவான்மியூர், பெசன்ட் நகர், நீலாங்கரை, மாமல்லபுரம் கோவில் கடற்கரை உள்ளிட்ட இடங்களிலும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் அதிகாலையிலேயே வாக்கிங், ஜாக்கிங் என தங்களது அன்றாட உ டற்பயிற்சிகளை மேற்கொண்டனர்.

அதேசமயம், கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சுற்றுலா தலங்களுக்கு வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், முககவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.