புதுடெல்லி: விவசாயிகளின் போராட்டத்தின் வாயிலாக, தனது பெயரைக் கெடுக்கும் நெறிமுறையற்ற செயல்களில் ஈடுபட்டிருப்பதாக, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்களின் மீது புகாரளித்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.
மத்திய மோடி அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால், நேரடியாக பயனடைவது அம்பானி மற்றும் அதானிகள் என்ற கருத்து வெளிப்படையாக பரவியுள்ளது. அதற்கு வலுசேர்க்கும் வகையில், அதானி குழுமம் அமைத்துள்ள வேளாண் உற்பத்தி பொருள் சேமிப்பு கிடங்குகள் பற்றிய தகவல்கள் வெளியாகின.
இத்தகைய காரணங்களால், தாங்கள் இனிமேல் ஜியோ நெட்வொர்க்கை பயன்படுத்தப்போவதில்லை என்று சிம் கார்டுகளை பல லட்சம் விவசாயிகள் மற்றும் அவர்களை சார்ந்தோர் வீசி எறிந்ததாக செய்திகள் வெளியாகின.
இதனையடுத்தே, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்களின் நெறியற்ற சந்தை செயல்பாடுகள் என்பதன் அடிப்படையில், இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளது ஜியோ. அதாவது, தங்கள் நிறுவனம் தொடர்பான தவறான தகவல்கள் விவசாயிகள் மத்தியில் பரவுவதற்கு, இந்நிறுவனங்கள் காரணமாக உள்ளன என்பது அந்தக் குற்றச்சாட்டின் சாராம்சம்.