புதுடெல்லி: பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்றும், நவீனகால தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது என்றும் அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கிருஷ்ணா எல்லா கூறியுள்ளார்.
அந்நிறுவனம், தனது தடுப்பு மருந்திற்கு, இந்திய அரசின் மருந்துகள் ஒழுங்குமுறை அமைப்பின் அனுமதிக்காக காத்திருக்கிறது.
கிருஷ்ணா எல்லா கூறியிருப்பதாவது, “இம்மருந்து தொடர்பாக, குரங்குகளிடமிருந்து எடுத்த தரவுகள் திறன்வாய்ந்தவையாக உள்ளன. மேலும், மனிதர்களுக்கு நடத்தப்பட்ட நிலை 1 மற்றும் நிலை 2 சோதனைகளும், இம்மருந்து பாதுகாப்பானது என்பதை உறுதி செய்தன. எனவே, இம்மருந்து சந்தைப் பயன்பாட்டிற்கு ஏற்றது என்ற நிலையை எட்டியுள்ளது.
ஆரம்பகட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், சீனா மற்றும் ரஷ்ய நாடுகளும், கொரோனா தடுப்பு மருந்திற்கு அவசரகால அனுமதி வழங்கும் முடிவை மேற்கொண்டுள்ளன.
அதேசமயம், போதுமான பரிசோதனை ஆதாரங்கள் இல்லாமல், நாங்கள் அனுமதி கோரவில்லை. எங்கள் நடைமுறையில் எந்தவித தவறும் இல்லை. எங்களிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளன” என்றுள்ளார் அவர்.