சென்னை:
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கிறது.
தமிழகம் முழுதும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவம்பர், 16ல் துவங்கியது. அன்றைய தினம், அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, வரும், 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். வாக்காளர்கள் வசதிக்காக, கடந்த மாதம், 21, 22ம் தேதிகளில், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது.
கடந்த, 21ம் தேதி நடந்த முகாமில், 5.43 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதில், 4.38 லட்சம் விண்ணப்பங்கள் பெயர் சேர்க்கக் கோரி வரப்பெற்றுள்ளன. அதேபோல, 22ம் தேதி நடந்த முகாமில், 8.03 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. இதில், 6.14 லட்சம் பேர், பெயர் சேர்க்கக் கோரி விண்ணப்பித்திருந்தனர்.மீண்டும், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், இன்றும், நாளையும், வாக்காளர் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.
இம்முகாமில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பம் அளிக்கலாம். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, 15ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. எனவே, பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். முகாமிற்கு செல்ல முடியாதவர்கள், www.nvsp.in, kttps://voterportal.eci.gov.in என்ற இணையதளங்களிலும், ‘VOTER HELP LINE’ மொபைல் ஆப்ஸ் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.