டெல்லி: ஜனநாயகம், உபி அரசின் லவ் ஜிகாத் சட்டம், புதிய நாடாளுமன்ற கட்டிடம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ப. சிதம்பரம் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவீட்டில் கூறி இருப்பதாவது: நாட்டில் அதிக ஜனநாயகம் இருக்கிறது என்று அதிகாரி ஒருவர் கூறுகிறார். அதிகமான அதிகாரத்துவம் இருக்கிறது என ஜனநாயகவாதி ஒருவர் கூறுகிறேன் என்று கூறி உள்ளார்.
நிதி ஆயோக்கின் துணைத் தலைவரான அமிதாப் காந்த், ஜனநாயகம் குறித்து அண்மையில் தெரிவித்த கருத்துக்கு பதிலடி தரும் வகையில்,இந்த பதிவை அவர் வெளியிட்டு உள்ளார். இது தவிர, உத்தரப்பிரதேச அரசின் லவ் ஜிகாத் சட்டம், புதிய நாடாளுமன்ற கட்டிடம் குறித்தும் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அந்த பதிவுகளில் அவர் கூறி இருப்பதாவது: சுதந்திரமான ஜனநாயகத்தின் இடிபாடுகளின் மீது புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். உ.பி. அரசின் லவ் ஜிகாத் குறித்த சட்டம் குறித்து விமர்சித்த ப. சிதம்பரம் அமைதி, இலக்கியம் ஆகிய இரண்டு பிரிவுக்கும் உத்தரப் பிரதேச அரசு நோபல் பரிசு பெறத் தகுதியானது என்று கூறி உள்ளார்.
தொடர்ந்து அவர் தமது பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளதாவது: புதிய சட்டங்களை இயற்றி அமல்படுத்துவதிலும் உ.பி. அரசு மிகவும் புத்தாக்கத்துடன் உள்ளது. லவ் ஜிகாத் என்ற குற்றத்தை வேறு யார் கண்டுபிடித்திருக்க முடியும்? என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.