வாஷிங்டன்

நேற்று பிஃபிஸர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை நாடெங்கும் பயன்படுத்த அமெரிக்க அரசின் ஆலோசனைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்கத்தில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  இதற்காகப் பல நாடுகளிலும் தடுப்பூசி கண்டறியும் முயற்சிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன.  அமெரிக்காவில் இதுவரை 1.60 கோடிக்கும் மேல் பாதிக்கப்பட்டு சுமார் 3 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.   எனவே தற்போது அமெரிக்காவில் தடுப்பூசிக்கு அவசியத் தேவை உள்ளது.

அமெரிக்க நிறுவனமான பிஃபிஸர் நிறுவனமும் ஜெர்மனியைச் சேர்ந்த பயோண்டெக் நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.  அந்த நிறுவனத்தின் விண்ணப்பம் மற்றும் சோதனை முடிவுகள் ஆகியவை அமெரிக்க அரசின் ஆலோசனைக் குழுவால் ஆராயப்பட்டது.

ஆய்வின் முடிவில் குழுவினர் இந்த குழுக் கூட்டத்தின் அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தி உள்ளனர்.  இந்த வாக்கெடுப்பில் பிஃபிஸர் மற்றும் பயோண்டெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிக்கு 17-4 என்னும் விகிதத்தில் வாக்கு கிடைத்துள்ளது.  அதையொட்டி இந்த தடுப்பூசியை நாடெங்கும் பரவலாகப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 அடுத்த வாரம் ஒப்புதலுக்கு அளிக்கப்பட்டுள்ள மற்றொரு நிறுவனமான மாடர்னா நிறுவன தடுப்பூசி குறித்து ஆலோசனைக்குழு ஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளது.   மூன்றாவதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஒரே முறையில் ஊசி அளிக்கக் கூடிய தடுப்பூசி விண்ணப்பித்துள்ளது.  இதைத் தவிர ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவனத்தின் கூட்டுத் தயாரிப்பும் ஒப்புதலுக்கான வரிசையில் உள்ளது.

தற்போதுள்ள நிலையில் அமெரிக்க மக்கள் தொகையில் 70% பேருக்கு கொரோனா தடுப்பூசி போடவேண்டி உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.  எனவே ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களின் தடுப்பூசிக்கு அரசு ஒப்புதல் அளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.