சண்டிகார்: விவசாயிகளின் பிரமாண்ட போராட்டம் காரணமாக, ஹரியானா மாநிலத்தில் ஆளும் பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான ஜேஜேபி கட்சியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஹரியானாவில் கடந்த சட்டமன்ற தேர்தலில், பாரதீய ஜனதாவுக்கு பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், மொத்தம் 10 இடங்களைப் பெற்றிருந்த ஜேஜேபி கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக.
அக்கட்சியின் தலைவர் துஷ்யந்த் செளதாலாவுக்கு துணை முதலமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தற்போது நிலைமையை மாற்றியுள்ளது.
தங்கள் தொகுதிகளில், மக்களின் மனவோட்டத்தை அறிந்து அதன்படி செயல்பட, அக்கட்சியின் பல சட்டமன்ற உறுப்பினர்கள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில், ஜேஜேபி மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் தங்களின் உறவு உறுதியானது என்று அறிவித்தாலும், தற்போது, பாஜக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவது குறித்த குரல்கள் அக்கட்சிக்குள் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கூடியவிரைவில் ஹரியானா மாநில அரசியலில் பெரிய பூகம்பம் ஏற்படலாம் என்றும் நம்பப்படுகிறது.