புதுடெல்லி: விவசாயப் பொருட்களை சேமிக்கும் வகையிலான கட்டமைப்புகளை, மேற்கொண்டுள்ள அதானி குழுமத்தின் நடவடிக்கை குறித்து விரிவான செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் அகர்ஷன் உப்பல், ஹரியானா மாநிலத்தில் கடுமையாக தாக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா முடக்க காலத்தில், விவசாயிகளுக்கு மாபெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய 3 வேளாண் சட்டங்களை அவசர அவசரமாக நிறைவேற்றியது மோடி அரசு.
இதனை திரும்ப பெறக்கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் தீரமாக, வரலாறு காணாத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர் தலைநகர் டெல்லியில். இதனால், என்ன செய்வதென்று தெரியாமல், விக்கித்து நிற்கிறது மோடி அரசு.
இந்நிலையில், ஊடகவியலாளர் அகர்ஷன் உப்பல், பல நூறு ஏக்கர்களை விலைக்கு வாங்கி, அவற்றில் வேளாண்மை பொருட்களை சேமித்து வைக்கும் வகையிலான கட்டங்களை அதானி குழுமம் கட்டி வருவது குறித்த விரிவான செய்திகளை வெளியிட்டார் அகர்ஷன் உப்பல். இவர் IBN24 என்ற ஊடகத்தில் பணியாற்றி வருகிறார்.
அவரின் இந்த செய்தி, நாடெங்கிலும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. புதிய வேளாண்மை சட்டங்களுக்கும், இதற்கும் உள்ள தொடர்பு குறித்து கருத்துகள் எழுந்தன.
இந்நிலையில், ஊடகவியலாளர் அகர்ஷன் உப்பல், ஹரியானா மாநிலத்தில், ஒரு போதை கடத்தல் கும்பலை காவல்துறை கைது செய்தது தொடர்பான சம்பவத்தில், கடுமையாக தாக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், இதன் பின்னணியில் வேறு பெரிய சதி இருக்கும் என்பதே சமூகப் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. அவர்கள், அதானி குழுமம் தொடர்பான செய்திகளை இதனோடு ஒப்பிடுகின்றனர்.