சென்னை: நெடுஞ்சாலைகள பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளதால், சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சுங்க்ச்சாவடிகளில் 50 சதவிகிதம் மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
நெடுஞ்சாலைகளை பராமரிக்க வேண்டிய, சுங்கச்சாவடி நிர்வாகங்கள் சரியான முறையில் பராமரிக்காததால், பல சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுவதுடன், போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக உள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்றமே தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலைகள் துறை ஆணையம் சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், சாலையில் உள்ள குழிகள் அனைத்தும் 10 நாட்களில் சரிசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைக்கும் சாலைகள் உலகத் தரத்துக்கு இணையாக இருப்பது இல்லை என்றும், மதுரவாயல் – வாலாஜா பேட்டைசாலை கடந்த 2 ஆண்டுகளாக முறையாக சீரமைக்கப்படாமல் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது’, மோசமான சாலைகளால் ஏற்படும் விபத்துக்களுக்கு இழப்பீடு கோரும் போது இனி பாதிக்கப்பட்டவர்கள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் துறை போன்றவற்றையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும், என அறிவுறுத்தினர்.
பின்னர் மதுரவாயல் வாலாஜாபேட்டை சாலையை பழுதுபார்க்கும் வரை 2 வார காலத்துக்கு அந்த சாலையில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதேபோல நொளம்பூரில் நெடுஞ்சாலை ஓரமாக மூடப்படாதமழைநீர் வடிகாலில் விழுந்து தாய்,மகள் இறந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்ட நீதிபதிகள், பலியான தாய், மகளுக்கு தமிழகமுதல்வர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளதுபோல, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையமும் இழப்பீடு வழங்குவது குறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் 21ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.