சென்னை: மழைகாலத்தின்போது, மழைநீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில், சென்னை புறநகர் பகுதிகளில் 254 கோடியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
வடகிழக்கு பருவமழை, நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக கடந்த ஒரு மாதம் மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை உள்பட பல மாவட்டங்களில் ஏரிகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுபோல, மழை காரணமாக சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகள் இன்னும் மழைநீரால் சூழப்பட்டு உள்ளன. அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் வேளச்சேரி, கோவிலம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வடியாத இடங்களை அமைச்சர்கள் செங்கோட்டையன், பெஞ்சமின் ஆகியோர் பார்வையிட்டனர். கோவிலம்பாக்கம், நன்மங்கலம், மேடவாக்கம், வேங்கைவாசல் போன்ற இடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினர்.
பின்னர் செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “புயல்களால் ஏற்பட்ட சேதங்களை நேரிடையாக சென்று பார்வையிட்டு தேங்கி உள்ள மழைநீரை வெளியேற்ற கால்வாய்கள் அமைக்க ஆய்வு செய்யப்பட்டது. சென்னை புறநகரில் பிரச்னைகளுக்கு நிரந்தரமாக தீர்வு காண உலக வங்கி உதவியுடன் திட்டங்களை செயல்படுத்தி வடிகால்வாய்கள் அமைக்க 2 கட்டமாக 184 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. தற்போது, 3ம் கட்டமாக 254 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் மழைநீர் வடிகால் கால்வாய்கள் உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும். இதன் காரணமாக வருங்காலங்களில் மழைநீர் தேங்குவது தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.