நாகை: தமிழக முதல்வர் பழனிச்சாமி இன்று 2வது நாளாக நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் மழை சேதம் குறித்து நேரில் ஆய்வு செய்து வருகிறார். அப்போது விவசாயிகளை நேரில் சந்தித்தும், வயலில் இறங்கி நாற்றுகளை பார்த்தும் ஆய்வு செய்து வருகிறார்.

தமிழகத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. கனமழை வெள்ளம் காரணமாக விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்த பகுதிகளை   தமிழக முதல்வர் நேற்றுமுதல் நேரில் சென்று பார்வையிட்டு, விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

நேற்று, புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் பகுதிகளை பார்வையிட்டவர், வீராணம் ஏரியையும் பார்வையிட்டார்.  கடலூர் மாவட்டத்தில் விளைநிலங்கள் சேதம் தொடர்பாக கணக்கிட்டு அரசுக்கு அறிக்கை அளித்த பின் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து நேற்று மாலை  நாகப்பட்டினம் சென்று பபார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 2வது நாளாக திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களை பார்வையிட்டு வருகிறார்.

இன்று சாலை சாலை மார்க்கமாக  நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூர் மாவட்டம் வந்த முதல்வர்,  நன்னிலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். தொடர்ந்து மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.  அப்போது,  மழை நீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்களை பார்வையிட்டார்.  திருவாரூர் மாவட்டம் கொக்காலக்குடியில் புயல், மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். கனமழையால் சேதமடைந்த பயிர்களை வயலில் இறங்கி முதல்வர் ஆய்வு செய்தார்.