சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காணொளி கல்வி பயிலும் வகையில் ஏழை மாணாக்கர்கள் 110 பேருக்கு ஸ்மார்ட் மொபைல், டேப்லெட் வழங்கி உதவி செய்துள்ளார் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது.
கொரோனா தொற்று பரவலையடுத்து அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக கல்வி நிறுவனங்கள் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. இருந்தாலும், பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தி, தேர்வுகளையும் நடத்தி வருகிறது. இதற்கு முக்கியத்தேவையான இணையம் இணைப்பு மற்றும் ஸ்மார்ட் போன் அல்லது டேப்லெட், லேப்டாப் போன்றவை தேவைப்படுகிறது. ஆனால், பல ஏழை மாணாக்கர்கள், ஆன்லைனில் பயில செல்போன், டேப்லட், லேப்டாப் போன்றவற்றை வாங்க இயலாத சூழல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், அதுபோன்ற ஏழை மாணாக்கர்கள் கல்வி பயிலும் வகையில் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் முயற்சியால் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி போலீஸ் பாய்ஸ் கிளப் மற்றும், ஹெல்ப் சென்னை சமுக நிறுவனம் மற்றும் எச்.சி.எல் பவுண்டேசன் சார்பில் கிடைக்கப்பெற்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் போன், டேப்லெட் பிசி போன்றவற்றை 110 பேருக்கு காவல் ஆணையாளர் மகேஷ்குமார் வழங்கினார்.
காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் ஏ.அமல்ராஜ், இணை ஆணையர் எஸ்.மல்லிகா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.